Tuesday, January 26, 2010

கடவுள் ஓர் உணர்வு

எனக்கு புரியவில்லை நான் என்னவென்று; ஏன் இந்த பிறப்பு, பிறப்பு என்பது கூட ஒரு விசித்திரமாய் தோன்றுகிறது. நான் நினைக்கிறன் நடப்பவை, இல்லை இல்லை நடப்பதாய் நாம் நினைக்கும் எல்லாமே கடவுளாய் நாம் நினைக்கும் அந்த பேராற்றலின் கனவோ அல்லது அதன் நினைவலைகளோ......என்ன ஒரு சிந்தனை, அதிகமாக சிந்திக்க சிந்திக்க குழப்பம் தான் அதிகமாகிறது.

காற்று, நீர்,நெருப்பு, நிலம், மின்சாரம், இடி, மின்னல், மழை, புவியீர்ப்பு சக்தி, நுண்ணுயிர், புல், பூண்டு, புழு, பூச்சி, தாவரம், செடி, கோடி, மரம், மீன், பறவை, விலங்குகள், மனித இனம் ஆகியவற்றை ஒருசேர உருவாக்கிய அந்த பேராற்றலை கடவுள் என்று ஒரு சிறு வார்த்தையில் அடக்குவது சரிதான் என எனக்கு தோன்றவில்லை

இப்பிரபஞ்சத்தின் விரிவை உணர்ந்த எவரும் இல்லை அந்த பிரமாண்டத்தை உணரக்கூட முடியாமல் பிரமிக்கும் என்னை போன்றவருக்கு கடவுள் ஓர் அசாத்தியம். ஆனால் நிதர்சனமான உண்மை. கடவுளுக்கு உருவம் கொடுக்க முயல்பவர்கள் அதை அறியவில்லை என்றே கூறுவேன். கடவுளை அது என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. கடவுள் பாலுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்றே நான் நினைக்கிறேன்.

இப்படி பட்ட பிரமாண்டத்தை உணரத்தான் முடியும், பார்க்க இயலாது கேட்க இயலாது.

காற்றை, உயிர் மூச்சை, மின்சாரத்தை, மின்காந்த அலைகளை, புவியீர்ப்பு சக்தியை மற்றும் பல மிகவும் பலம்வாய்ந்த சக்திகளை எவ்வாறு காண இயலாதோ அவ்வாறே கடவுளை காண இயலாது. கடவுளை கண்களால் காண வேண்டும் என நினைப்பது மூடத்தனம். அனால் காற்றை, மின்சாரத்தை, மின்காந்த அலைகளை, புவியீர்ப்பு சக்தியை எவ்வாறு நாம் பயன்படுத்திகொள்ள முடியுமோ அவ்வாறே கடவுள் எனப்படும் மாபெரும் பிரபஞ்ச சக்தியை நாம் ஆட்கொண்டு அதை உணர முடியும். அதை நாம் பயன்படுத்திகொள்ளவும் முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நான் ஆட்கொண்டு என கூறினேன் ஏன் தெரியுமா?

உணர்வுகளை கவனியுங்கள்......தொடு உணர்வு உங்கள் ஸ்பரிசம் மட்டுமே அறியும், சுவை உங்கள் நாவிற்கு மட்டுமே இன்பம் தரும், காட்சிகள் உங்கள் கண்களை மட்டுமே திருப்தி செய்யும், இசை உங்கள் காதுகளுக்கும் மனதிற்கும் இன்பமளிக்கும், மற்றும் எத்தனையோ உணர்வால் ஏதோ ஒன்றிரண்டு புலன்களே நன்மைபெறும். ஆனால் அன்பு அல்லது காதலில் மட்டுமே அதனை புலன்களும், உடலும், உயிரும், மனமும், அறிவும், ஆத்மாவும் ஒரே நேரத்தில் வயப்படுகிறது. காதல் வயப்படுவோர் கடவுளை உணர்கிறார்கள். கடவுளை உணர்ந்தவர்கள் அன்பு சொருபாமாகிரார்கள். கடவுளை உணரும் போது நாம் ஆட்கொள்ளபடுகிறோம். கடவுள்.... ஓர் உணர்வு அதை விவரிக்க இயலாது.

அப்படி என்றால் கடவுள் நல்லவரா, கெட்டவரா?

கடவுள் நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒன்று. கடவுள் என்ற ஒன்று இருந்தால் சாத்தான் அல்லது பிசாசு என்ற ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா என கேட்பவர் உண்டு. ஏன் என்றால் நன்மை நடக்கும் போது அது கடவுள் செயல் என்றும் தீமை நடக்கும் போது அதற்கு காரணம் சாத்தன் அல்லது பிசாசு என்றும் கூறுவார்.

அனால் என்னை பொறுத்தவரை நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நன்மையும் தீமையும் காரண காரியமாகிறது. எப்படியென்றால், புவியீர்ப்பு சக்தியே இவ்வுலகப்பந்தை அந்தரத்தில், விண்வெளியில் மிதக்க வைக்கிறது. புவியீர்ப்பு சக்தி இல்லாமல் நாம் நிற்கவோ, நடக்கவோ இயலாது, ஒரு பொருள் வைத்த இடத்தில் இருக்காது, எந்த நீர் நிலையிலும் தண்ணீர் இருக்காது. வாகனங்களை தரையில் ஓட்ட முடியாது, ஏன் நாம் சாப்பிடும் உணவுகூட செறிக்காது. அப்படியே செறித்தாலும் அதை வெளியேற்ற முடியாது. புவியீர்ப்பு சக்தி அத்தனை முக்கியமானது, அது இல்லாமல் இவ்வுலகம் இல்லை. ஆனால் அதே புவியீர்ப்பு சக்தியின் காரணத்தால் பல மாடி கட்டிடத்தில் இருந்து விழுபவன் உயிரிழக்கிறான். வானில் பறக்கும் விமானம் தரையில் விழுந்து நொறுங்குகிறது. அப்படியென்றால் புவியீர்ப்பு சக்தி நல்லதா கெட்டதா? .இப்படிப்பட்ட தீமைகள் நடப்பதற்கு காரணம் புவியீர்ப்பு சக்தி என கூற இயலுமா?

தொடருவேன்........



No comments:

Post a Comment